உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வந்தவர் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வந்த முதியவர் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வந்த முதியவர் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கோட்டுபுல்லாம்பாளையம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மசையப்பன் (வயது 72) கூலி தொழிலாளி. முதியோர் உதவித்தொகையாக மாதம், 1,000 ரூபாய் பெற்று வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
விபத்தில் இவரது வலது கையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்க கோரி விண்ணப்பம் செய்ய திட்டமிட்டார். நேற்று தனது 2வது மகள் சித்ரா என்பவருடன் ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர், அவர் சிறுநீர் கழிப்பதற்காக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் தெரிவித்த தகவலின்படி, ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. அதில் வந்த மருத்துவ ஊழியர் பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.