ஈரோட்டில் உயிர்ம வேளாண்மை திருவிழாவினை துவக்கி வைத்த அமைச்சர்
ஈரோடு மாவட்டம் திண்டல் சீமா மஹாலில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உயிர்ம வேளாண் திருவிழாவினை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் திண்டல் சீமா மஹாலில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உயிர்ம வேளாண் திருவிழாவினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (23ம் தேதி) துவக்கி வைத்தார்.
உணவுத் தேவைகள் தன்னிறைவு பெற்ற சமுதாயம் பாதுகாப்பான உணவை நோக்கி விதிமுறைகளோடு தோற்றுவிக்கப்பட்ட ஓர் வேளாண் உற்பத்தி முறையே உயிர்ம வேளாண்மை எனப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்ப, மண் அரிமானத்தைக் குறைத்தல், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுத்தல், பல்லுயிர் பெருக்கத்தை அதிகப்படுத்துதல், தரமான, சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குதல் போன்றவை இதன் கோட்பாடுகளாகும்.
மேலும், ஆரோக்கியம், சுற்றுச்சூழல், நம்பகத் தன்மை, கவனித்தல் போன்றவை இதன் நெறிமுறைகளாகும். மண்புழு உரங்கள், கரும்புத் தோகையிலிருந்து மக்கிய உரம் தயாரித்தல், தென்னை நார்கழிவுகளை கொண்டு மக்கு உரம் தயாரித்தல், பஞ்காவியா, மீன் அமிலம் என்பது இயற்கை உரங்கள். தழைச்சத்தை நிலைப்படுத்தும் நுண்ணுயிர் உரங்கள், ரைசோபியம், அசோஸ்பைரில்லம், மணிச்சத்தை நிலைப்படுத்தும் நுண்ணுயிர் உரங்கள், பாஸ்போபாக்டீரியா போன்றவை உயிர் உயிர் உரங்கள். உயிர்ம வேளாண்மையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த ஏராளமான மேலாண்மை முறைகள் உள்ளது.
உயிர்ம வேளாண்மையை கடைப்பிடிக்கும்போது, விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை தாங்களே தயாரித்து கொள்வதால், உற்பத்தி செலவு குறைத்து அதிகபடியான வருவாமத்தை விவசாயிகள் பெறலாம். மேலும், இம்முறையில் நஞ்சில்லா விளைபொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால் பல்வேறு உணவு பழக்கத்தால் ஏற்படும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.
இயற்கை விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை உயிர் உரங்கள், உயிர் பூஞ்சாணக்கொல்லிகள், மண்புழு உரப்படுக்கைகள், மண்புழு உற்பத்தி கூடங்கள் முதலானவை தமிழ்நாடு அரசு வேளாண்மை துயிைன் மூலம் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட்டு விவசாயிகளுக்கு பயிற்சிகள் மற்றும் கண்டுநர் சுற்றுலா இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் செயல்விளக்கங்கள் விவசாயிகளுக்கு செய்து காண்பித்து வருகிறது.
மேலும் சான்று பெற்ற இயற்கை விவசாய பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டு முடியும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானிய விலையில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால் மண்ணில் கனிம சத்து அதிகரிக்கப்பட்டு மண்வளம் காக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்று (23ம் தேதி) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உயிர்ம வேளாண் திருவிழாவினை துவக்கி வைத்து, நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனத்தை பார்வையிட்டார். விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும், விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப துண்டு பிரசுரங்களை வெளியிட்டு, விவசாயிகளுக்கு மண்வள அட்டையினை வழங்கினார்.
தொடர்ந்து, ஏ.ஈ.டி. பள்ளி வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் நடைபெற்ற தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்து நடைபெற்ற மாவட்ட அளவிலான கருத்தரங்கினை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இக்கருத்தரங்களில் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் நடத்தும் விவசாயிகள், டிராக்டர் நிறுவன அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வேளாண் இயந்திர அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், இணை இயக்குநர் (வேளாண்மை) வெங்கடாசலம், பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் செந்தில்வளவன், விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்று உதவி இயக்குநர் சத்தியராஜ், துணை இயக்குநர்கள் சீனிவாசன், தமிழ்ச்செல்வி, உதவி இயக்குநர் சாமுவேல் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.