சென்னிமலையில் கலைஞர் கனவு இல்லம் கட்ட 47 பயனாளிகளுக்கு ஆணை வழங்கிய அமைச்சர்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் கட்ட 47 பயனாளிகளுக்கு அமைச்சர் சாமிநாதன் பணி ஆணைகளை வழங்கினார்.
சென்னிமலை ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் கட்ட 152 பயனாளிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பணி ஆணைகளை இன்று (16ம் தேதி) வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், அம்மன் காட்டேஜ், பசுவபட்டியில் நடந்த கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.1.66கோடி மதிப்பீட்டில் புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், 105 பயனாளிகளுக்கு ரூ.95.50 லட்சம் மதிப்பீட்டில் ஊரக தொகுப்பு வீடுகள் சீரமைக்கும் பணிக்கான ஆணைகளையும் வழங்கினார்.
இந்த விழாவில், அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, வீடு கட்டாமல், கட்ட முடியாமல், குடிசையில் வாழ்ந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு கலைஞர் கனவு இல்லம் என்ற பெயரில் புதிய வீடுகள் கட்டுகின்ற திட்டம் என்ற வகையிலும், ஏற்கனவே இருக்கக்கூடிய அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பராமரிக்க இயலாமல் இருக்கின்ற அந்த வீடுகளை பராமரிப்பதற்கும், நிதி வழங்கி தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய வீடுகள் கட்டுவதற்கு ரூ.3.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்தொகையின் மூலம் வீடுகளை நேர்த்தியாக அமைத்து, அதே நேரத்தில், ஏற்கனவே பராமரிப்பின்றி இருக்கின்ற வீடுகளை பராமரித்து, புதிய இல்லங்களை அமைத்து, நீங்கள் மன மகிழ்ச்சியோடு, வாழ்வில் பல்வேறு நலன்களை பெற வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பசுவப்பட்டி, எக்கட்டாம்பாளையம், எல்லைகிராமம், கொடுமணல், குப்பிச்சிபாளையம், முகாசிபிடாரியூர், முருங்கத்தொழுவு, ஒட்டப்பாறை, புதுப்பாளையம் மற்றும் புஞ்சைப்பாலத்தொழுவு ஆகிய 10 கிராம ஊராட்சிகளைச் சார்ந்த 47 பயனாளிகளுக்கு தலா ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 900 வீதம் ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், 105 பயனாளிகளுக்கு ரூ.95.50 லட்சம் மதிப்பீட்டில் ஊரக தொகுப்பு வீடுகள் சீரமைக்கும் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜ், சென்னிமலை பேரூராட்சித் தலைவர் ஸ்ரீதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.