கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை என்கவுண்டரில் சுட்டுத்தள்ள யோசனை

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை என்கவுண்டரில் சுட்டுத்தள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே‌.சி.கருப்பணன் கூறினார்.

Update: 2024-06-24 11:23 GMT

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் கருப்பணன்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு சம்பவம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரின் போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்த போது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அன்றைய தினமே இதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்து இருக்காது. அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்து விடும் என்ற எண்ணத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

எம்எல்ஏ, பஞ்சாயத்து தலைவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சொன்ன போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக திமுக பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். கள்ளச்சாராயம் மூலம் இவ்வளவு உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசு இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக உள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காப்பாற்ற வேண்டும். சாராயம் தயாரித்த நபர்கள் மீது நிறைய வழக்குகள் உள்ளன . எனவே, அவர்களை என்கவுண்டரில் போடுங்கள். அப்போது தான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News