நம்பியூரில் பொதுமக்களிடம் இருந்து 210 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்
நம்பியூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 210 மனுக்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்றார்.
நம்பியூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 210 மனுக்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்றார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று (16ம் தேதி) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, பொது சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், துறைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் மேற்கொண்ட அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள், மாணவ, மாணவிகளின் கல்வித் தரம், தேர்ச்சி விகிதம், பள்ளிகள் உட்கட்டமைப்பு, நியாய விலை கடைகள், அரசு அலுவலகங்கள் புரணப்பு செய்தல், பல்வேறு சான்றிதழ் வழங்குதல், கால்நடை அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆய்வுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அலுவலர்களுடன் விவாதித்தார்.
மேலும், ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, நம்பியூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 210 மனுக்களை பெற்று, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, நம்பியூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் இயங்கி வரும் மாணவர் விடுதியினை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேசன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால், உதவி இயக்குநர் (நில அளவை) ஹரிதாஸ், நம்பியூர் வருவாய் வட்டாட்சியர் ஜாகிர் உசேன் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.