230 அரங்குகள் கொண்ட மாபெரும் ஈரோடு புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்
230 அரங்குகள் கொண்ட மாபெரும் ஈரோடு புத்தகத் திருவிழாவை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்கி வைக்கிறார்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் சி.என்.கல்லுாரி வளாகத்தில் தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில், நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா இன்று (ஆகஸ்ட் 04) வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா 2023 இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு துவங்க உள்ளது. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள இந்த திருவிழாவை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன். எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
இந்த புத்தகத் திருவிழா இன்று (ஆகஸ்ட் 04) முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் புத்தகத் கண்காட்சி நடக்கிறது. புத்தகத் திருவிழாவைப் பார்வையிட நுழைவுக் கட்டணம் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்களுடன், முக்கியப் பதிப்பகங்களும் பங்கேற்கின்றன. இங்கு 230 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
இதில், ஆங்கிலப் புத்தகங்களுக்கு 70 அரங்குகளும், மொத்த அரங்குகளில் சுமாா் 30 சதவீதம் பள்ளி, கல்லூரி மாணவா்கள், போட்டித் தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்காகவும் அமைக்கப்படவுள்ளன. பொதுமக்களுக்கு 10 சதவீதம், பள்ளி, கல்லூரிகளுக்கு 10 முதல் 35 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. மேலும், வரும் 15ம் தேதி வரை நடை பெற உள்ள புத்தக திருவிழாவில் தினந்தோறும் மாலையில் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது.