ஈரோட்டில் 20வது புத்தகத் திருவிழா நாளை மறுதினம் (2ம் தேதி) தொடங்குகிறது

Erode News- ஈரோட்டில் 20வது புத்தகத் திருவிழா நாளை மறுதினம் 2ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குவதாக மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினார்.

Update: 2024-07-31 11:45 GMT

Erode News- மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் செய்தியாளர்களை சந்தித்த பேசிய போது எடுத்த படம்.

Erode News, Erode News Today- ஈரோட்டில் 20வது புத்தகத் திருவிழா நாளை மறுதினம் 2ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குவதாக மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினார்.

தமிழ்நாடு அரசும் மக்கள் சிந்தனைப் பேரவையும் இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா 2024, வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் விமரிசையாக தொடங்குகிறது என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

 ஈரோட்டில் இன்று (31ம் தேதி) மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தாவது:-  அறிவு, கல்வி மற்றும் சிந்தனை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் மக்கள் சிந்தனைப் பேரவை வெள்ளிவிழா கண்டு இவ்வாண்டு 26ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இப்பேரவையின் சார்பில், ஈரோட்டில் 2005ம் ஆண்டு முதன் முதலாக ஈரோடு புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டு இவ்வாண்டு 20ம் ஆண்டை எட்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசுடன் இணைந்து இந்த ஈரோடு புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த 2024ம் ஆண்டுக்கான ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடத்தப்படுகிறது.

இம்முறை ஏறத்தாழ 250 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இதில் முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில புத்தக பதிப்பகங்கள் மற்றும் விற்பனை நிறுவனங்கள் ஸ்டால்கள் அடங்கும். இப்புத்தகத் திருவிழா நாளை மறுதினம் (2ம் தேதி) வெள்ளிக்கிழமை  தொடங்கி ஆக.13 வரை நடக்கிறது. தொடக்க விழா 2ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் தொடங்கும்.

இதில், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு புத்தக அரங்கை திறந்து வைக்கிறார். விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகிக்கிறார். தமிழக அரசின் பொது நூலகத் துறை இயக்குநர் கே.இளம்பகவத், ஈரோடு மாநகராட்சி ஆணையர் என்.மனிஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இப்புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தமிழர் படைப்பரங்கை ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ., திறந்து வைக்கிறார். மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் , ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் , துணைமேயர் வி.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். முதல் விற்பனையை எஸ்கேஎம். மயிலானந்தன் தொடங்கி வைக்கிறார்.

இப்புத்தகத் திருவிழா தினசரி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரையிலும் நடைபெறும். நுழைவுக் கட்டணம் இல்லை. அனுமதி இலவசம். தினமும் மாலை சிந்தனை அரங்கில் பிரபல பேச்சாளர்களின் கருத்தாழம் மிக்க சொற்பொழிவுகள் நடைபெறும். ஆக.13ல் நடைபெறும் நிறைவு விழாவில் பிரபல விஞ்ஞானி ஏ.சிவதாணு பிள்ளை கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின்போது, மக்கள் சிந்தனைப் பேரவை பொருளாளர் க.அழகன், பொதுக் குழு உறுப்பினர்கள் எஸ்.சண்முகம் மற்றும் வி.பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News