ஈரோடு மாவட்டத்தில் 49 அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை உணவு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 49 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வடை, பாயாசத்துடன் வாழை இலையில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.;

Update: 2024-09-20 10:15 GMT

கொடுமுடி மற்றும் அம்மாபேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 49 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வடை, பாயாசத்துடன் வாழை இலையில் அறுசுவை உணவு நேற்று (19ம் தேதி) வழங்கப்பட்டது.

மத்திய அரசின் திதி போஜன் திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில், பள்ளிகளில் பயின்று சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கி 100 நாட்களில் ஏதாவது ஒரு முக்கிய நாட்கள், தேசத்தலைவர்கள், ஆசிரியர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்களின் பிறந்த நாளன்று நல்விருந்து வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கி 100 நாட்களில் ஒரு நாள் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் கீரை வகைகளை கொண்டு சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்ட ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிகுந்த சமச்சீர் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதற்காக நன்கொடையாளர்கள் ஏற்பாடு செய்ய பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆரோக்கியமற்ற, சத்தில்லாத உணவுகள் மற்றும் துரித உணவுகள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படவுள்ளது.

இதன்படி, ஒரு கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஏற்பாட்டின்படி கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 2,096 மாணவர்களுக்கும் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1,050 மாணவர்களுக்கும் மதிய உணவாக சாதம், சாம்பார், புளிக்குழம்பு, ரசம், மோர், பொரியல், வடை, பாயாசம் மற்றும் அப்பளம் ஆகியவற்றுடன் அறுசுவை உணவு நேற்று (19ம் தேதி) வழங்கப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு நல்விருந்து வழங்க பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News