அந்தியூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் வாலிபர் பலி
அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாவிளக்கு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் சிவசிதம்பரம் (28). இவர் அந்தியூர் அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் கோகோ கோலா ஏஜென்சியில் வேலை செய்து வந்தார். மேலும் திருமண நிகழ்ச்சிகளில் பீடா போடும் பகுதி நேர வேலையும் செய்து வந்தார்.
இந்நிலையில், சிவசிதம்பரம் அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பீடா போடும் வேலையை முடித்து விட்டு அங்கிருந்து இரவு 10.30 மணி அளவில் தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே வந்த போது கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்து கொண்டிருந்த லாரி சிவசிதம்பரம் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது.
அதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இதுகுறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி வந்து பார்வையிட்டார்.
மேலும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து தொடர்பாக சிவசிதம்பரத்தின் தந்தை கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.