இம்மாத இறுதியில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி; ஈரோடு ஆட்சியர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு இம்மாத இறுதியில் மகளிர் திட்ட பணியாளர்கள் மூலம் நடத்தப்பட உள்ளதாக ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு, திண்டல் சீமா ஹால் திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உரிமைகள் திட்டம் தொடர்பாக, அரசுத் துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான திட்ட விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது: உலக வங்கி நிதி உதவியுடன் தமிழகத்தின் கடைக்கோடியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சேவைகள் மற்றும் திட்டங்கள் வழங்கிட தமிழ்நாடு அரசு மூலம் உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்திட ரூ.1,773 கோடி நிதியுதவி (தமிழ்நாட்டு அரசு பங்கு தொகை 30% மற்றும் உலக வங்கி நிதி 70%) வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவைகள் முழுமையாக கிடைத்திடும் வகையில் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒருங்கிணைந்த ஓரிட சேவை மையங்கள் (ஓஎஸ்பி) மற்றும் வட்டார அளவில் ஓரிட துணை சேவை மையங்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளுதல் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் கண்டறியும் வகையில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு சமூக தரவு தளத்தை உருவாக்குதல், தற்சார்பு மற்றும் ஆக்க திறனை மேம்படுத்துவதற்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மற்றும் முன்மாதிரி திட்டங்கள் செயல்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும், பல்வேறு கட்டங்களாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் இத்திட்டதின் கால அளவு 6 வருடங்கள், முதற்கட்டமாக திருச்சி, தருமபுரி கடலூர், தென்காசி மற்றும் சென்னையில் 3 மண்டலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது தற்பொழுது இரண்டாம் கட்டமாக, மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதில் நமது மாவட்டமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்ட செயலாக்கத்திற்கு புதியதாக மாவட்ட அளவில் மூன்று திட்ட அலுவலர்கள் சமுதாய பணி, கூட்டாண்மை வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு, பயிற்சி பிரிவுகள்) நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
அதே போன்று ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய வருவாய் கோட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த ஓரிட சேவை மையங்கள் அமைக்கப்படவுள்ளது. அதில், ஈரோடு வருவாய் கோட்டத்திற்கு ஒருங்கிணைந்த ஓரிட சேவை மையம் அமைப்பதற்காக, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், காலியாக உள்ள இடம் ஆய்வு செய்யப்பட்டு ஒருங்கிணைந்த ஓரிட சேவை மையம் அமைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதே போன்று ஈரோடு மாவட்டத்தில் வட்டார அளவில் ஓரிட துணை சேவை மையமும் அமைக்கப்படவுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு நவம்பர்-2023 மாத இறுதியில் மகளிர் திட்ட பணியாளர்கள் மூலம் நடத்தப்படவுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்துத் துறைகளின் சார்பில் அளிக்கப்படும் அரசின் திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இக்கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள அரசுத் துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் இத்திட்டத்தினை பற்றி நன்கு அறிந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டுமென தெரிவித்தார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான குழு கூட்டத்தில் முதல் கூட்ட பொருளாக டி.என்.ரைட்ஸ் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மாவட்ட செயலாக்க குழு பற்றி அனைத்துத்துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரக உதவி தனி அலுவலர் மைதிலி, உரிமைகள் திட்ட மேலாளர்கள் ராஜராஜன், தேவகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) மைக்கேல், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை, செயற்பொறியாளர் (வேளாண் - பொறியியல் துறை) விஸ்வநாதன், மாவட்ட திட்ட அலுவலர் (உரிமைகள் திட்டம்) வில்பிரட் சௌந்தரம், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.