சென்னிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை நடந்த சூரசம்ஹார விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
சென்னிமலை முருகன் கோவிலில் சனிக்கிழமை (நேற்று) மாலை நடந்த சூரசம்ஹார விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி (முருகன்) கோவிலில் கடந்த 14ம் தேதி காலை கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதற்காக அன்று காலை சென்னிமலை கைலாச நாதர் கோவிலில் இருந்து சுவாமிகளை படிக்கட்டுகள் வழியாக மலை கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு நேற்று (சனிக்கிழமை) வரை 5 நாட்களும் உற்சவர் மற்றும் மூலவருக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று இரவு நடைபெற்றது.
முன்னதாக நேற்று மாலை 4 மணிக்கு மேல் மலைக்கோவிலில் இருந்து சுவாமிகளை படிக்கட்டுகள் வழியாக அடிவாரத்திற்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து இரவு 7 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்ய புறப்பட்டார் அப்போது முருகப்பெருமானின் போர் படை தளபதி வீரபாகு ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முன் சென்று, முதலில் மேற்கு ராஜ வீதியில் யானைமுகன் உருவத்தில் வந்த சூரனின் தலையை வதம் செய்தார். அதைத்தொடர்ந்து வடக்கு ராஜ வீதியில் நடைபெற்ற போரில் சிங்கமுக சூரனையும், கிழக்கு ராஜ வீதியில் நடைபெற்ற போரில் வானுகோபன் சூரனையும் வதம் செய்தார்.
இறுதியாக தெற்கு ராஜ வீதியில் சூரபத்மனுடன் உச்சகட்ட போர் நடைபெற்றது. இதில் முருகப்பெருமான் நேரடியாககளத்தில் இறங்கி சூரபத்மனின் தலையை தன்னுடைய வேலினால் வதம் செய்தார். அப்போது வான வேடிக்கைகள் முழங்கதிரளான பக்தர்கள் 'முருகனுக்கு அரோகரா...., வேலனுக்கு அரோகரா....' என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து வள்ளி-தெய் வானையுடன் முருகப்பெ ருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.