ஈரோடு மாவட்டத்தில் கோடை மழை: 30.80 மில்லி மீட்டர் பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 15.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 15.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.
இந்த ஆண்டு வெப்பம் தகிக்கும் மாவட்டமாக ஈரோடு மாறியது. கடந்த 2 மாதங்களாகவே கோடை வெயில் வாட்டி எடுத்தது. இதனால் பொதுமக்கள் மழை பெய்யாதா? என்று ஏங்கினார்கள். இதற்கிடையே அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் தொடங்கியது. ஏற்கனவே வெப்ப அலை வீசும் நேரத்தில் அக்னி நட்சத்திரம் என்ன செய்யுமோ என்று மக்கள் அஞ்சினார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மக்களை ஆறுதல் படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து, 2வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கோபி, நம்பியூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. பின்னர், இரவு 9.10 மணி அளவில் திடீரென மழை பெய்தது. இந்த மழை 20 நிமிடம் நீடித்தது.
இதேபோல், கோபியை அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி, கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 8 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 45 நிமிடம் நீடித்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேபோல், அம்மாபேட்டை, வெள்ளித்திருப்பூர், பூதப்பாடி, பட்லூர், அந்தியூர், அத்தாணி, மைக்கேல்பாளையம், நஞ்சமடைக்குட்டை, பெருமாள்பாளையம், நகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் நேற்று (மே.5) காலை 8 மணி முதல் இன்று (மே.6) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
அம்மாபேட்டை - 15.40 மி.மீ ,
வரட்டுப்பள்ளம் அணை - 3.20 மி.மீ ,
கோபிசெட்டிபாளையம் - 10.20 மி.மீ ,
நம்பியூர் - 2.00 மி.மீ ,
மாவட்டத்தில் மொத்தமாக - 30.80 மி.மீ ஆகவும், சராசரியாக - 1.81 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.மேலும், மாவட்டத்தில் ஒருபுறம் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்போது, மற்றொரு புறத்தில் மழை பெய்து வருவது ஆச்சரியமடையச் செய்கிறது.