கடம்பூர் மலைக் கிராமங்களில் ஜாதி சான்று கேட்டு மாணவர்கள் பள்ளி, கல்லூரி புறக்கணிப்பு
ஈரோடு மாவட்டம் கடம்பூர் கிராமங்களில் பழங்குடி இன சான்றிதழ் கேட்டு மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடம்பூர் கிராமங்களில் பழங்குடி இன சான்றிதழ் கேட்டு மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் அத்தியூர், அத்தியூர் புதூர், பவளக்குட்டை, கீழூர், கேர்மாளம், கரளையம், கொம்பநாயக்கனூர், கிட்டாம்பாளையம், மோடிகடவு, கணபதிபாளையம், இருட்டிபாளையம், திண்ணையூர், பெரியசாலட்டி, சின்னசாலட்டி, குரும்பூர், கல்கடம்பூர், நடுவூர், ஏரியூர், மூலக்கடம்பூர், மல்லியம்மன் துர்க் கம், தொண்டூர், குன்றி உள்பட பல்வேறு மலைக்கிராமங்களில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மலையாளி இன மக்கள் வசித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள மலையாளி இன மக்களுக்கு மலையாளி எஸ்டி என பழங்குடி இன ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடம்பூர் மலைக்கிராமங்களில் உள்ள மலையாளி இன பொதுமக்களுக்கு அரசு சார்பில் இதுவரை பழங்குடி இன ஜாதி சான்றிதழ் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
கடந்த 50 ஆண்டுகளாக இங்குள்ள மலைக்கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் போராட்டம் நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. பழங்குடி இன ஜாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு சலுகைகள் ஆகியவற்றை இழந்து உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த மலையாளி இன மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலையாளி இன மக்கள் தங்களுக்கு பழங்குடி இன சாதி சான்றிதழ் வழங்கக்கோரி நேற்று (7ம் தேதி) காலை திடீரென காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். மலைப்பகுதியில் உள்ள அந்தந்த கிராமங்களில் உள்ள கோவில், சமுதாயக்கூடம் மற்றும் மண்டபங்களில், காலை 9 மணி முதல் மாலை சுமார் 5 மணி வரை பதாகைகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுடன் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பழங்குடி இன ஜாதி சான்றிதழ் வழங்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்த தகவல் கிடைத்தும் சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் இரவு 7 மணிக்கு கல்கடம்பூர் மலைக்கிராமத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து தங்களுக்கு பழங்குடி இன சான்றிதழ் கிடைக்கும் வரை காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மலையாளி இன மக்கள் தெரிவித்தனர்.