அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 10ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2024-04-20 13:30 GMT

உயிரிழந்த மாணவன் முருகன்.

அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 10ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள வெள்ளித்திருப்பூர் குரும்பபாளையத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் முருகன் (வயது 14). இவன் குரும்பபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். 

இந்நிலையில், பொதுத்தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்த மாணவன் முருகன், வீட்டின் அருகே இருந்த 6 அடி தண்ணீர் உள்ள 30 அடி ஆழம் உள்ள கிணற்றை எட்டி பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது, முருகன் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தான்.

இதில், மாணவன் முருகனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தவன் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினான். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி சத்தமிட அருகில் இருந்தவர்கள் கிணற்றில் இறங்கி முருகனை மீட்டு மேலே கொண்டு வந்தனர் . பின்னர், முருகனை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு, அவனை பரிசோதித்த மருத்துவ அலுவலர் வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து , முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுளளது. 

பெற்றோர் கண்காணிப்பு அவசியம் 

பள்ளி விடுமுறையில் முதல் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளை கண்டிப்பாக பெற்றோர் கண்காணிக்க வேண்டும். நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் எங்காவது சென்று வரலாம் என்ற எண்ணம் தோன்றுவது இயல்புதான். ஆனால், அவர்கள் ஆபத்தான பகுதிகளுக்கு செல்லாமல் கண்காணிப்பது பெற்றோரின் கடமை ஆகும். 

பொதுவான அறிவுரையை தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர் கூறிவைக்கவேண்டும். பெற்றோரின் அனுமதி இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி கூறுவது அவசியம் ஆகும். மீன் பிடிக்க எரிக்கரிக்குச் செல்வது, கைவிடப்பட்ட கல்குவாரிகளில் தேங்கிக்கிடக்கும் நீரில் விளையாடச் செல்வது, ஆற்றில் அல்லது கிணற்றில் நீச்சல் தெரியாமல் இறங்குவது போன்ற விபரீத செயல்களில் பிள்ளைகள் இறங்கக் கூடாது. 

மாணவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு அவசியம். அவ்வாறு விழிப்புணர்வு இருந்தால் சிறிய வயது உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.

Tags:    

Similar News