புத்தாண்டு கொண்டாட்டம்: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விடுத்த எச்சரிக்கை
புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் 1000 உள்ளூர், போக்குவரத்து, ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் சிறப்பு பணியில் நாளை (டிச.31) மாலை முதல் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புத்தாண்டையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்கள், முக்கிய கோவில்கள், மாநில மற்றும் மாவட்ட எல்லைகள், முக்கிய சாலை சந்திப்புகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகன ரோந்துகள், நான்கு சக்கர வாகன ரோந்துகள், நெடுஞ்சாலை மற்றும் நகர ரோந்துகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும். நீண்ட தூர பயணம் செல்வோர் இரவு பயணத்தை தவிர்க்குமாறும் அத்தியாவசியமாக செல்பவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிது ஒய்வு மற்றம் தேனீர் அருந்தி செல்லுமாறும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் மற்றும் 4 சக்கர வாகன ஒட்டிகள் சீட்பெல்ட் அணிவதை உறுதி செய்யுமாறும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பு உணர்வுடனும் பயணிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிரந்தர சோதனை சாவடிகள் தவிர, மேலும் 81 இடங்களில் (ஈரோடு நகர உட்கோட்டம்-27, பெருந்துறை உட்கோட்டம்-15, பவானி உட்கோட்டம்-16, கோபி உட்கோட்டம்-8 மற்றும் சத்தி உட்கோட்டம்-15) வேக கட்டுப்பாட்டு மையங்கள் சாலை தடுப்புகளுடன் அமைக்கப்படும்.
இதுதவிர ஈரோடு மாவட்ட போக்குவரத்து காவல் பிரிவினர் சார்பில் 30 இடங்களில் வாகன சோதனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, மீறி ஒட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அதிவேகமாகவும், சாகச பயணம் மற்றும் பைக் ரேஸ் போன்றவை நடத்தக்கூடாது.
பொதுஇடங்களில் கேக் வெட்டி எஞ்சிய பகுதிகளை சாலைகளில் போட்டு விபத்து ஏற்பட காரணமாக இருக்கக் கூடாது. எவ்விதத்திலும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும்.
மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அனுமதி பெற்று நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விதிமுறைகளின் படி நடத்தப்படுவது சம்மந்தப்பட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
தனியார் நீச்சல் குளங்கள் மற்றும் பொது நீர் நிலைகளுக்கு அருகில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தவிர்க்கப்படவேண்டும், நீரில் இறங்கி யாரும் கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சி.சி.டிவி கேமிரா கண்காணிப்பு செய்யவும் சம்மந்தப்பட்டவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அனைத்து வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், சுற்றுலா தலங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் குழப்பம் விளைவிக்க முற்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், 2024ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் அசம்பாவிதம் மற்றும் விபத்து இல்லாத கொண்டாட்டமாக உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீதி மீறல்கள் குறித்து தகவல்களை 0424-2259100, 0424-2260100, 9498181211 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.