பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் வாரந்தோறும் வரவு வைக்க நடவடிக்கை
இனி வரும் நாட்களில் வாரந்தோறும் பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் (ஆவின்) ரூ.4.56 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால் உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்க நினைவுப் பரிசுகளையும், பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வினீத் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் அவர்கள் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
இம்முகாமில், அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் சராசரியாக 27,80,000 லிட்டர் அளவில் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது 31,27,000 லிட்டர் அளவில் பால் கொள்முதல் உயர்ந்துள்ளது. அதில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 27,000 லிட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்காக துறை அலுவலர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பால் உற்பத்தி அளவினை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கான கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலகத்தில் சுமார் ரூ.4.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் மற்றும் துறையின் வளர்ச்சியை மென்மேலும், அதிகரிக்கம் வகையில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது.
மேலும், ஆவின் என்பது தமிழகத்தில் மிகப்பெரிய நிறுவனமாகும். நமது தமிழ்நாட்டில் பால் உற்பத்திக்கான அதிகமான சூழல் உள்ளது. மேலும், 11,000க்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளது. ஆவின் நிறுவனத்தில் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனத்தின் சார்பில் சரியான தரத்தில் மற்றும் தரமான விலையில் பொதுமக்களுக்காக பால் விற்பனை செய்து வருகின்றோம்.
இத்துறைக்கு விவசாயிகளே இன்றியமையாதவர் ஆவர். இந்நிறுவனத்தின் சார்பில் உற்பத்தி செய்யும் பாலை சீரான விலையில் ஆண்டு முழுவதும் தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி வழங்கி வருகின்றோம். இங்குள்ள சிறு சிறு பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்து வருகின்றோம்.
அதன்படி, பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை முழுமையாக வழங்கப்பட்டதுடன் இனி வரும் நாட்களில் வாரம் தோறும் பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் துறையின் சார்பில் கவனமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பாலின் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிச்சயம் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்வதோடு இந்நிறுவனத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் அனைவரும் பயன்பெறும் வகையில் மேம்படுத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்
தொடர்ந்து, 50 பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கறவைக்கடன் உதவியினையும், 23 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தலா 2 கிடாரி கன்று வாங்குதல் மற்றும் பராமரிப்பிற்கான உதவித்தொகையினையும், 182 பால் உற்பத்தியாளர் உறுப்பினர்களுக்கு ரூ.149 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளை பராமரிப்பதற்காக கனரா வங்கி சார்பில் பராமரிப்பு கடனுதவியினையும், 268 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.134 லட்சம் மதிப்பீட்டில் தலா 1 கறவை மாடு வாங்குவதற்காக வங்கிக்கடனுதவியினையும், தாளவாடி பகுதியில் உள்ள 3 சங்கங்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் பால் பகுப்பாய்வு கருவியினையும், தேசிய பால்வள வாரிய உதவியுடன் 55 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மறு தாம்பு வகை சான்றளிக்கப்பட்ட தீவன விதை சோள தொகுப்புகளையும், 700 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் தீவன மக்காச்சோள விதைகளையும், 1 பால் உற்பத்தியாளருக்கு ரூ.15,000/- மதிப்பீட்டில் தீவன மக்காச் சோள விதை உற்பத்திக்கான ஆதார விதைத் தொகுப்பினை வழங்கினார்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிருக்கான துவங்கப்பட்டுள்ள பசுவணாபுரம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.30,000/- மதிப்பீட்டில் 5 எண்ணிக்கையிலான துருவுறா கேன்களையும், தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை திட்டத்தின் கீழ் ரூ.1.16 லட்சம் மதிப்பீட்டில் 5 கிராமநிலை ஊழியர்களுக்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ நைட்ரஜன் குடுவைகளையும், பால்வள மேம்பாட்டிற்கான தேசிய திட்டம் சார்பில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்களுக்கு 30 எண்ணிக்கையிலான பால் பகுப்பாய்வு கருவிகளையும், தாட்கோ திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பால் உற்பத்தியாளர்களுக்கு தீவனம் வளர்ப்பதற்கான இடுபொருட்களையும், பால் உற்பத்தியாளர்களின் 42 எண்ணிக்கையிலான கால்நடைகளுக்கு ரூ.14.70 லட்சம் மதிப்பீட்டிலான இழப்பீட்டு தொகையினையும், பேரறிஞர் அண்ணா நலநிதி திட்டத்தின் கீழ், ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர் குடும்பத்தினருக்கு விபத்து நிவாரணம், கல்வி மற்றும் திருமண உதவித்தொகையினையும் மற்றும் ரூ.36.12 லட்சம் செலவில் 7 தற்காலிக கால்நடை மருத்துவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையினையும் என ரூ.4.56 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், சிறந்த தொகுப்பு குளிர்விப்பான் மையங்கள், அதிக அளவில் கால்நடை தீவனம் மற்றும் தாது உப்பு கலவை கொள்முதல் செய்த சங்கங்கள், தேசிய அளவில் சிறந்த மகளிர் பால் உற்பத்தியாளர், அதிக எண்ணிக்கையிலான பால் உற்பத்தியாளர்களுக்க கறவைக்கடன் வழங்கிய வங்கிகளுக்கும், சிறந்த கால்நடை மருத்துவர்களுக்கும், ஆவின் பால் உபபொருட்கள் விற்பனையை சிறப்பாக மேற்கொண்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், கொழுப்புச்சத்து நிறைந்த பால் அதிக அளவில் விற்பனை செய்த முகவர்கள், பால் உபபொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்த முகவர்கள், அதிக அளவில் பால் மற்றும் உபபொருட்களை விற்பனை செய்த அரசு நிறுவனம் மற்றும் சிறப்பாக விற்பனை மேற்கொண்ட அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் / பொது மேலாளர் (ஆவின்) பேபி, துணை பொது மேலாளர் (பால்வளம்) ரவிச்சந்திரன், தலைவர், ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் காளியப்பன், இயக்குநர் கோவிந்தராஜ், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் சுப்பிரமணியம் (2-ம் மண்டலம்), குறிஞ்சி.என்.தண்டபாணி (4-ம் மண்டலம்), அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.