மக்கள் சிந்தனைப் பேரவையின் வெள்ளி விழா: ஈரோட்டில் நாளை தொடக்கம்

மக்கள் சிந்தனைப் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா ஈரோட்டில் நாளை (29ம் தேதி) தொடங்குகிறது.

Update: 2024-06-28 02:00 GMT

மக்கள் சிந்தனைப் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா.

மக்கள் சிந்தனைப் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா ஈரோட்டில் நாளை (29ம் தேதி) தொடங்குகிறது.

இதுதொடர்பாக மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது:- 

மக்கள் சிந்தனைப் பேரவையின் 25ம் ஆண்டு விழா வருகின்ற நாளை (29ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (30ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் ஈரோடு கொங்கு கலையரங்கில் நடைபெறவுள்ளது. நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள தொடக்க விழாவிற்கு விடுதலைப் போராட்ட வீரர் லட்சுமிகாந்தன் பாரதி தலைமை வகிக்கிறார். மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் இறையன்பு தொடக்க விழா சிறப்பு உரையாற்றுகிறார்.

காலை 11.30 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ள அறிவியல் அமர்வுக்கு இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் சிறப்பு நிலை பேராசிரியர் டாக்டர் நரேந்திரன், இஸ்ரோ முன்னாள் துணை இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். அக்னி ஸ்டீல்ஸ் இயக்குநர்கள் சின்னசாமி, கிருஷ்ணமூர்த்தி, தங்கவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இதைத்தொடர்ந்து, மாலை 3 மணியிலிருந்து 4 மணி வரை நடைபெறவுள்ள படைப்பாளிகளுக்குப் பாராட்டு நிகழ்வில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 25 படைப்பாளிகள் பாராட்டப்படுகின்றனர். இதில், ஈரோடு இந்து கல்வி நிலையத்தின் தலைவர் கே.கே.பாலுசாமி, யூஆர்சி பழனியம்மாள் மெட்ரிக் பள்ளியின் செயலாளர் சி. தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பாராட்டு மடல்களை வழங்கிச் சிறப்புரையாற்றுகிறார். 

மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை அயல்நாடுகளில் இருந்து இந்நிகழ்வில் பங்கேற்க வரும் ஆளுமைகள் உரையாற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 10க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அயலகப் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்க வருகை தர உள்ளனர். மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் குழுவினரின் தமிழ் ஓசை எனும் நவீன இசையில் சங்கத் தமிழ்ப் பாடல்களை இசைத்துப் பாடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News