அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை
அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொய்யேரிகரை பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த ஒரு வருட காலமாக வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது வரையிலும் பொது பாதை ஆக்கிரமிப்பு அகற்ற எந்தவொரு நடவடிக்கையும் வருவாய்த்துறை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மைக்கேல்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த அந்தியூர் துணை வட்டாட்சியர் ஜெகநாதன் மற்றும் அந்தியூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி பாதையை அளந்து ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக, அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்ப்பட்டது..