ஈரோடு: வாரிசு சான்றிதழ் தர ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

ஈரோடு மாவட்டம் ஆசனூரில் வாரிசு சான்றிதழுக்கு ரூ.50 ஆயிரம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-10-11 00:15 GMT

ருத்ரசெல்வன்.

ஆசனூரில் வாரிசு சான்றிதழுக்கு ரூ.50 ஆயிரம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் சீஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40). இவர் தனது பெரிய மாமனாரின் இறப்புக்கு வாரிசு சான்றிதழ் பெற ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வன் (வயது 37) என்பவரை அணுகி உள்ளார்.

அதற்கு, ருத்ரசெல்வன், வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு தொகை தர முடியாது என ஆனந்தன் கூறியுள்ளார். பிறகு, ரூ.50 ஆயிரம் கொடுத்ததால் சான்றிதழ் வழங்குவதாக கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை ஆனந்தன் கடந்த 5ம் தேதி கொடுத்துள்ளார்.

பின்னர், மீதி பணத்தை பிறகு தருவதாக கூறிவிட்டு வந்துள்ளார். இந்த பணத்தை கொடுக்க விரும்பாத அவர் இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, போலீசார் ரசாயனம் தடவிய ரூ. 45 ஆயிரத்தை ஆனந்தனிடம் கொடுத்து அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, ஆனந்தன் மீதி ரூ.45 ஆயிரத்தை கொடுப்பதற்காக நேற்று (10ம் தேதி) ஆசனூர் கிராம நிர்வாக அலுவலகம் சென்றுள்ளார். பின்னர், கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வனிடம் அந்த பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வனை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர், அவரிடம் இருந்த ரூ.45 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, போலீசார் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வனை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News