அந்தியூரில் சாலையில் ஆறாய் ஓடும் சாக்கடை கழிவுநீர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் - பர்கூர் சாலையில் சாக்கடை கழிவுநீர் துர்நாற்றத்துடன் ஆறாய் ஓடி வீடுகளுக்குள் புகுந்தது.

Update: 2024-05-24 01:00 GMT

சாலையில் ஓடிய சாக்கடை கழிவுநீர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் புதுப்பாளையம் இருந்து வரும் சாக்கடை கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

இதனால், சாக்கடை கால்வாயில் செல்ல வேண்டி கழிவுநீர் அந்தியூர் - பர்கூர் சாலையில் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் திறந்த நிலையில் ஆறாய் ஓடியது. துர்நாற்றத்துடன் ஓடிய கழிவு நீரை மூக்கை பிடித்தவாறு பொதுமக்கள் சிரமத்துடன் கடந்து சென்றனர்.


மேலும், இக்கழிவுநீர் 1வது வார்டுக்கு உட்பட்ட வேடர் காலனி, காமராஜர் சாலை பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இதனையறிந்த, 1வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன் ஜேசிபி இயந்திரத்தினை வரவழைத்து பள்ளத்தை தோண்டி சாக்கடை அடைப்பை சரி செய்தார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், இந்த சாக்கடை கால்வாய் நிரம்பி ஆறாய் ஓடுவதற்கு புதுப்பாளையத்தில் இருந்து வரும் கால்வாயை அந்தியூர் பேரூராட்சியுடன் இணைந்தது தான் காரணம். புதுப்பாளையத்தில் இருந்து அந்தியூர் வரை போடப்பட்ட கால்வாய் 7 அடி உள்ளது. ஆனால், அந்தியூர் பேரூராட்சி கால்வாய் 2 அடி மட்டுமே உள்ளது.

இதனால், 1வது வார்டு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்காலங்களுக்கு முன்பாகவே புதிதாக சாக்கடை கால்வாய் அகலமாக அமைத்து பொது மக்களின் குறைகளை தீர்க்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News