மொடக்குறிச்சி அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 பேர் கைது
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மொடக்குறிச்சி அருகே கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் மொடக்குறிச்சி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள், மொடக்குறிச்சி மஞ்சக்காட்டுவலசு, நேரு வீதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சிவக்குமார் (வயது 22), மஞ்சக்காட்டுவலசு ஒரத்திமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் மகன் பிரித்திவிராஜ் (வயது 19), மொடக்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த குருநாதன் மகன் கமலக்கண்ணன் (வயது 20), மொடக்குறிச்சி எம்.வேலம்பாளையம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த கணேஷ் மூர்த்தி மகன் ராகுல் (வயது 22) ஆகியோர் என்பதும், இதில் பிரித்விராஜ் என்பவர் கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் 10 போதை மாத்திரைகளை பறி முதல் செய்தனர்.