ஈரோட்டில் இரண்டாம் கட்டமாக 32 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ஆசிரியர் குடியிருப்பு காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், முதல்வரின் இரண்டாம் கட்ட காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் முத்துசாமி இன்று தொடங்கி வைத்தார்.;

Update: 2023-03-28 06:30 GMT

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ஆசிரியர் குடியிருப்பு காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், முதல்வரின் இரண்டாம் கட்ட காலை உணவு திட்டத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை நீட்டிப்பு செய்து தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ஆசிரியர் குடியிருப்பு காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி முதலமைச்சரின் நீட்டிக்கப்பட்ட காலை உணவு திட்டத்தினை இன்று (மார்ச்.28) செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்களுடன் உணவருந்தினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. மேலும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்க நாட்டிலேயே முன்னோடியாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினால், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் பசியின்றி கல்வி கற்கவும், அவர்களின் அறிவாற்றல் வளர்ச் பெறவும், மாணவர் வருகை அதிகரிக்கவும், தக்கவைக்கவும் மேலும், வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு உற்ற உதவியாகவும், குழந்தைகளின் உடல் நலம் பேணுவதற்கும், உரிமையாக்கப்படும் ஊட்டச்சத்து உணவாக அமையும்.

மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், காலை உணவு இத்திட்டமானது, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சியில் உள்ள 26 பள்ளிகளில் 2,649 மாணவ, மாணவியர்களும், மேலும், தாளவாடி ஊராட்சி ஒன்றியம், திகனாரை ஊராட்சி தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் 38 பள்ளிகளில் என் 64 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் நீட்டிக்கப்பட்ட காலை உணவு திட்டமானது கடந்த 1-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால் இரண்டாம் கட்டமாக இன்று (மார்ச்.28) செவ்வாய்க்கிழமை ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் III ஆசிரியர் குடியிருப்பு காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நீட்டிக்கப்பட்ட இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 32 மாநகராட்சி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 5 -ஆம் வரை பயிலும் 5793 மாணவ, மாணவியர்கள் என ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 96 பள்ளிகளில் 9,180 மாணவ, மாணவியர்கள் பயன்பெற உள்ளனர்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு சில பிரச்சனைகள் உள்ளன. அவர்களுக்கு கை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்ற காரணத்தினால் 6-முதல் 12- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவியர்களுக்கு உயர் கல்வி வருகின்றபோது மாதம் ரூ.1000/- உதவித்தொகை கொடுப்பதற்கான புதுமைப்பெண் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகின்றார். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் மூலம் பள்ளிகளில் சேர்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளிகளின் படிப்பு கல்லூரிகளில் சேர்கின்ற மாணவிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்து இருக்கின்றது.

மேலும் சிவில் சர்வீஸ் தேர்வில் மாணவர்கள் தடையில்லாமல் எவ்வித பொருளாதாரம் இல்லாமல் சிரமப்படும் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு முதல் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டால் அவர்களுக்கு மாதம் ரூ.7500/- உதவித்தொகையும் அவர்களே இரண்டாவது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் ரூ.25,000/- கொடுப்பதற்காக நடவடிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்து வருகிறார். இந்த ஊக்கத்தொகை மற்ற மாநிலங்களோடு தமிழ்நாடு போட்டியிட்டு அதிகமான மாணவர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற சிவில் தேர்வுகளை வெற்றி பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை நோக்கி பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மகளிர்க்கான உரிமைத்தொகை 1 கோடி குடும்பம் பயன்பெறும் வகையில் இருக்கும்.

மேலும் சேதமடைந்த பள்ளிகள் சீரமைக்க கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அத்திக்கடவு அவினாசி திட்ட 106.8.கி.மீ நீளத்திற்கு முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. 83 கிளைகளில் உள்ள 1045 குளங்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டு அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணிவண்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் விஜயகுமார், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் சசிகுமார், சுப்ரமணியம் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News