அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: மாற்றுத்திறனாளி கைது

மொடக்குறிச்சி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 5 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-10-05 00:30 GMT

கைது செய்யப்பட்ட பாலமுருகன்.

மொடக்குறிச்சி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 5 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). மாற்றுத்திறனாளி. சர்க்கரை வியாபாரியான இவர் வருவாய்த் துறையில் ஓட்டுநர் பணி காலியாக இருப்பதாக கூறி, ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை கந்தவேல் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (42) என்பவரிடம் ரூ.2 லட்சத்தை பெற்றுள்ளார்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் வடக்கு தெருவை சேர்ந்த ஞானசெல்வம் (வயது 33), திருவண்ணாமலை மாவட்டம் மலைப்பாம்படி ஆலமர தெருவை சேர்ந்த பிரசாந்த் (வயது 33), தென்காசி மாவட்டம் அருணகிரிபுரம் அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அசோக்குமார் (வயது 26), தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வடகாந்த குளம் பகுதியைச் சேர்ந்த வீரபுத்திரன் (வயது 36) ஆகிய 4 பேரிடமும் தலா ரூ.2 லட்சம் என மொத்தம் 5 பேரிடம் இருந்து ரூ.10 லட்சம் பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் இவர்கள் 5 பேருக்கும் பாலமுருகன் வழங்கிய பணிநியமன ஆணை போலியானது என தெரியவந்துள்ளது. இதையடுத்து 5 பேரும் பணத்தை திருப்பி தருமாறு பாலமுருகனின் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் அவர் பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 5 பேரும் மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து போலி நியமன ஆணைகள், முத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததுடன், அவரை ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News