சத்தியமங்கலம் மனுநீதி நாள் முகாமில் ரூ.1.06 கோடியில் நலத்திட்ட உதவிகள்
சத்தியமங்கலம் மாக்கினாங்கோம்பை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 157 பயனாளிகளுக்கு நலத்தி்ட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சத்தியமங்கலம் மாக்கினாங்கோம்பை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 157 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம் அரசூர் உள்வட்டம், மாக்கினாங்கோம்பை கிராமம், குயவன்குழி பகுதியில் மனுநீதி நாள் முகாம் இன்று (21ம் தேதி) நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார்.
இதில், 157 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று (21ம் தேதி) சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகின்றது. மனுநீதி நாள் முகாம் என்பது மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒரு கிராமத்தில் முகாமிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதே ஆகும்.
அதன்படி, இன்று (21ம் தேதி) முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 6 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண உதவித் தொகைளையும், 44 பயனாளிகளுக்கு ரூ.18.64 லட்சம் மதிப்பீட்டில் இணையவழி பட்டாக்களையும், 83 பயனாளிகளுக்கு ரூ.73.03 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை ஒப்படை ஆணைகளையும், 211 பயனாளிகளுக்கு ரூ.4.42 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகைகளையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.4.59 லட்சம் மதிப்பீட்டில் நீர் இரைக்கு இயந்திரங்களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரத்து 530 மதிப்பீட்டில் தென்னை மரம் உள்ளிட்ட இடுபொருட்களையும் என மொத்தம் 157 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இதுபோன்ற மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்.
இம்முகாமில், சத்தியமங்கலம் வட்டாட்சியர் சக்திவேல், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் இளங்கோ, சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.