சத்தியமங்கலம் அருகே சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை தரும சாலை திறப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை தரும சாலை திறப்பு விழா நடை பெற்றது.;
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை தரும சாலையை பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த இக்கரை தத்தப்பள்ளியில் தென்கயிலை பர்வதம் அறக்கட்டளை சார்பில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை தரும சாலை திறப்பு விழா 1008 மகாமந்திரம் பாராயாணம், மகர ஜோதி ஏற்றுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து திருவருட்பா பாராயணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தென் கயிலை பர்வதம் அறக்கட்டளை நிறுவனர் வெங்கடேசன் ராதா கிருஷ்ணன் தலைமையில் தரும சாலை, ஞான சபை திறப்பு விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு தரும சாலை, ஞான சபையை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்பு, அன்னதானத்தையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, தொண்டும் பக்தியும் என்ற தலைப்பில் மேட்டுப்பாளையம் அகத்தியர் பீடம் சரோஜினி அம்மா மாதாஜியின் ஆன்மீக சொற்பொழிவு நடை பெற்றது. இதனையடுத்து, மஞ்சு நாதன், தாமல் கோ சரவணன் சொற்பொழிவு நடந்தது. மாலை செல்வ விநாயகர் வள்ளி கும்மி நடைபெற்றது.
இவ்விழாவில், அறக்கட்டளை தலைவர் புஷ்பம் ராதா கிருஷ்ணன்,செயலாளர் சீனிவாசன்,ரித்தீஷ் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி,வாசவி தங்க மாளிகை நிறுவனர் பிரபு காந்த்,உட்பட முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் ஞான சபை சங்கத்தார்கள், என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.