சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையில் 'வந்தேபாரத்' ரயிலுக்கு உற்சாக வரவேற்பு
சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் வந்தே பாரத் அதிவிரைவு ரெயிலை பயணிகள் மலர் தூவி வரவேற்றனர்.
சென்னையில் இருந்து கோவைக்கு அதிவிரைவு ரயில் வந்தே பாரத் சேவையினை பிரதமர் மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பிரதமர் துவக்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் எம்எல்ஏக்கள், ரயில்வே அதிகாரிகள், டெல்லி மற்றும் சென்னை பத்திரிகையாளர்கள் பயணம் செய்தனர்.
சேலம் மற்றும் ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் நூற்றுக்கணக்கானோர் புதிய ரயிலை மலர் தூவி வரவேற்றனர். ஈரோடு ரயில் நிலையத்தில் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வணக்கம் வந்தே பாரத் என்ற விளம்பர பலகைகளை தாங்கி வரவேற்றனர்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் பாஜக நிர்வாகி மங்களம் ரவி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவையில் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.விமானத்திற்கு நிகராக வந்தே பாரத் ரயிலில் சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ரவி தலைமையிலான குழுவினர் வந்தே பாரத் ரெயிலில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து சிறப்பு விருந்தினர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் விளக்கம் அளித்தனர்.