புளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட கால்நடைகள் சுமார் 2 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள புளியம்பட்டி கால்நடைசந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும். இந்த கால்நடைச்சந்தைக்கு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம் .
இந்நிலையில் இன்று நடைபெற்ற கால்நடைசந்தையில், 50 எருமைகள் , 650 கலப்பின மாடுகள் , 300 ஜெர்சி மாடுகள் , 300 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் எருமைகள் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரையிலும் , ஜெர்சி மாடுகள் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.53 வரையிலும் , சிந்து இனமாடுகள் ரூ.15 முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும் , நாட்டு மாடுகள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.76 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
சந்தைக்கு கொண்டுவரப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரங்களில் விற்பனை மந்தமான நிலையில் நடைபெற்றது. இந்த வாரங்களில் மாடுகளின் விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.