ஈரோட்டில் பண ஆசை காட்டி ரூ.20 லட்சம் மோசடி: மூவர் கைது

Erode news- ஈரோட்டில் பண ஆசை காட்டி செங்கல் சூளை உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த மூவரை ஈரோடு நகர காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-29 11:00 GMT

Erode news- கைது செய்யப்பட்ட மூவரை படத்தில் காணலாம்.

Erode news, Erode news today- ஈரோட்டில் பண ஆசை காட்டி செங்கல் சூளை உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த மூவரை ஈரோடு நகர காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னதம்பிபாளையம் அண்ணமார் பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 54). செங்கல்சூளை மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 3ம் தேதி இவரது கடைக்கு அருகில் வசிக்கும் நண்பரின் உறவினரான கொங்காடையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

மூர்த்தி, தனக்கு தெரிந்த நபர் ஒருவர் உள்ளார் என்றும், அவரிடம் ரூ.20 லட்சம் கொடுத்தால் ரூ.30 லட்சம் கொடுப்பார் என்றும் கூறியுள்ளார். இதை நம்பி, முத்துசாமி மூர்த்தியுடன் அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அவல்பூந்துறை பேருந்து நிறுத்தம் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த ஒரு நபர் மரப்பெட்டியில் கட்டுக்கட்டாக வைத்திருந்த பணத்தில் மூன்று 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சோதித்து பார்க்க கொடுத்துள்ளார். அதனை, வாங்கி பரிசோதித்த முத்துசாமிக்கு அது அசல் நோட்டு என தெரிந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 23ம் தேதி முத்துசாமி ஈரோடு நாச்சியப்பா வீதியில் உள்ள ஒரு பூக்கடை சந்தில் ரூ. 20 லட்சத்தை அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அந்த நபரும் தான் கொண்டு வந்த பேக்கில் ரூ‌30 லட்சம்  இருப்பதாக கூறி அதனை கொடுத்து விட்டு சென்றுள்ளார். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து முத்துசாமி பேக்கை திறந்து பார்த்த போது, அதில் வெள்ளைத் தாள்கள் கட்டுக்கட்டாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்ததையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துசாமி இதுகுறித்து ஈரோடு நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் லக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 54), பிரபு (வயது 39) மற்றும் ஈரோடு 60 வேலம்பாளையம் வெள்ளிவிழா காலனியைச் சேர்ந்த சாமிநாதன் (வயது 58) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆம்னி கார் மற்றும் பதிவு இல்லாத இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News