அந்தியூரில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.1 கோடி, 228 பவுன் மோசடி

அந்தியூரில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.1 கோடி, 228 பவுன் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2024-05-07 23:05 GMT

போலீசாரால் தேடப்படும் கருணாமூர்த்தி ‌

அந்தியூர் பகுதியில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.1 கோடி- 228 பவுன் நகைகளை மோசடி செய்த வழக்கில், 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் வேலாமரத்தை சேர்ந்த கருணாமூர்த்தியும், அந்தியூர் சின்னத்தம்பிபாளையம் பழைய மேட்டூரை சேர்ந்த லட்சுமணனும் நண்பர்கள். லட்சுமணன் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடன் தொகை வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் இணைந்து அந்தியூர், ஆப்பக்கூடல் பகுதிகளில் உள்ள பெண்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோரிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பணம் இல்லாதவர்கள் தங்க நகைகளை அவர்களிடம் அடகு வைத்து பணம் வாங்கி கொடுத்துள்ளனர். ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் ஒன்றரை லட்சம் தருவதாகவும், நகைகளை கொடுத்தால் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி தருவதாகவும் கூறி இவர்கள் இருவரும் பல வருடங்களாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வாறாக இவர்கள் இருவரும் பொது மக்களிடம் இருந்து இதுவரை ரூ.1 கோடியே 3 லட்சத்து 70 ஆயிரம் பணமும், 228 பவுன் நகைகளையும் வாங்கி உள்ளனர். அதற்குண்டான வட்டியை இருவரும் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கி வந்த நிலையில் கடந்த ஓராண்டாக அவர்கள் 2 பேரும் வட்டி வழங்கவில்லை.

இதனால் பணம், நகை கொடுத்தவர்கள் கருணாமூர்த்தி மற்றும் லட்சுமணனை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் இருவர் வீட்டுக்கும் சென்றபோது வீடு பூட்டு போடப்பட்டு இருந்தது. அவர்கள் இருவரும் தலைமறைவானதை தெரிந்ததும் பணம், நகை கொடுத்து ஏமாந்தவர்கள் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது கருணாமூர்த்தி, லட்சுமணன் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, ஆப்பக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து தலைமறைவான கருணாமூர்த்தி, லட்சுமணனை பிடிக்க அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் இன்று சிலர் வந்து கருணாமூர்த்தி, லட்சுமணன் மீது மோசடி புகார் அளித்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News