மொடக்குறிச்சி, கொடுமுடி பள்ளி மதிய உணவில் அழுகிய முட்டைகள்: ஆட்சியர் எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தாலுக்கா பள்ளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் வருவதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2023-11-04 06:15 GMT
மொடக்குறிச்சி தாலுக்காவில் அரசு பள்ளிக்கூடங்களில் வழங்கப்பட்ட அழுகிய முட்டைகள்.

மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தாலுக்காவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் வருவதாக புகார்கள் எழுந்து உள்ளன.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் மூலமும், முட்டைக்கென தனி ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாக முட்டையும் விநியோகிக்கப்படுகிறது.  

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தாலுக்காவில் உள்ள 40 பள்ளிகளுக்கு கடந்த ஒரு வாரமாக வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் வருவதாக புகார்கள் எழுந்து வந்தன. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மேலும், இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடியில் தரமற்ற முட்டைகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், முட்டைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். தரமற்ற முட்டைகளை அனுப்பி புதிய முட்டைகளை விநியோகம் செய்ய மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்த நிறுவனங்கள் தரமான முட்டைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், புகார்கள் எழும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News