ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ரூ.34.34 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ரூ.34.34 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், ரூ.34.34 கோடி மதிப்பீட்டில், பெருந்துறை சாலை, தாராபுரம் சாலை, காவேரி சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வியாழக்கிழமை (நேற்று) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், ஈரோடு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட, ஈரோடு பெருந்துறை காங்கேயம் சாலை வரை, விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் குமலன்குட்டை சந்திப்பு வரை 0.80 கி.மீ நீளமுள்ள சாலையை நடைபாதையுடன் கூடிய வடிகால் வசதியுடன் சாலையின் எல்லை வரை அகலப்படுத்தும் பணியினையும், ஈரோடு - தாராபுரம் (ஈவிஎன்) சாலையில் மின்சாரவாரிய அலுவலகம் முதல் காளைமாட்டு சிலை சந்திப்பு வரை, மாதிரி நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.16.40 கோடி மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, காவேரி சாலையில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.11.34 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நடைமேடையுடன் கூடிய வடிகால் பணிகள் மற்றும் சாலையில் எல்லையிலிருந்து எல்லை வரை அகலப்படுத்தும் பணிகள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மாதேஸ்வரன், உதவிக் கோட்டப் பொறியாளர் சரவணன், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் (மின்சார வாரியம் நகரம்) ராஜராஜேஸ்வரி, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் சேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.