ஆப்பக்கூடல் நால்ரோட்டில் சாலை மேம்பாட்டு பணி: அதிகாரிகள் ஆய்வு

Erode News- ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் நால்ரோட்டில் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று (24ம் தேதி) ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-08-24 11:30 GMT

Erode News- ஆப்பக்கூடல் நால்ரோடு பேருந்து நிறுத்தத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.

Erode News, Erode News Today- பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் நால்ரோட்டில் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று (24ம் தேதி) ஆய்வு மேற்கொண்டனர். 

ஈரோடு மாவட்டம் பவானி - ஆப்பக்கூடல் - சத்தியமங்கலம் மாநில நெடுஞ்சாலையில் ஆப்பக்கூடல் நால்ரோடு கவுந்தப்பாடி, அந்தியூர் புறவழிச்சாலை பிரிகிறது. இந்த ஆப்பக்கூடல் நால்ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. 

இதனால், சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சந்திப்பு பகுதியில் விபத்து மற்றும் நெரிசலை தவிர்க்க மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினரால் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள இடத்தினை சென்னை நெடுஞ்சாலைத்துறை சாலைப் பாதுகாப்பு கண்காணிப்புப் பொறியாளர் கார்த்திகேயன், திருப்பூர் கோட்டப் பொறியாளர் முருகபூபதி ஆகியோர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைத் துறை ஈரோடு கோட்டப் பொறியாளர் ரமேஷ் கண்ணா, பவானி உதவி கோட்டப் பொறியாளர் ராஜேஷ் கண்ணா, திருப்பூர் உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர்கள் சிவசுப்பிரமணியன், சேகர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதில், ஆப்பக்கூடல் சந்திப்பு பகுதியில் சாலையை இருபுறங்களிலும் 100 மீட்டர் விரிவுப்படுத்தி, சாலையின் நடுவில் தடுப்புகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

Similar News