அந்தியூர் அருகே சடலத்துடன் சாலை மறியல்
அந்தியூர் அடுத்த பிரம்மதேசம்புதூரில் சுடுகாடு வசதி கேட்டு கிராம மக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம்புதூர் காலனியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பல வருடங்களாக சுடுகாடு வசதி இல்லை என்றும், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் பிரம்மதேசம்புதூர் காலனியை சேர்ந்த செம்பன் என்பவரின் உடலை வைத்து அந்தியூர்-ஆப்பக்கூடல் சாலையில், திடீரென சுடுகாடு வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.