மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பொதுக்குழு தீர்மானம்

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2024-06-30 11:34 GMT

ஈரோட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தின் 14ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முரளி வரவேற்றார். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட தலைவர் பழனிவேல்ராஜன் முன்னிலை வகித்தார்.


கூட்டத்தில், வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் மாநில கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டத்தில் சுயவரம் நடத்தி தேர்வு செய்யப்படும் ஜோடிகளுக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் திருமணம் முடித்து வைத்து இப்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 4 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை உடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்களுக்கும் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆந்திரா மாநிலத்தில் இருப்பதை போல அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி தொகை ரூ 3,000 ஆகவும், அறிவுத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 5,000 வழங்க வேண்டும்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தனியாக நரம்பியல் மருத்துவர் நியமிக்க வேண்டும் என மேற்கண்ட தீர்மானங்கள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில், ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நல சங்க செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News