75வது குடியரசு தினம்: தேசியக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு ஆட்சியர்
ஈரோட்டில் குடியரசு தின விழாவையொட்டி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரூ.18.80 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை வழங்கினார்.
ஈரோட்டில் குடியரசு தின விழாவையொட்டி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரூ.18.80 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை (இன்று) வழங்கினார்.
ஈரோடு அடுத்த 46புதூர், ஆனைக்கல்பாளையம், ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்ற படி போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து, மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார். மேலும், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் என மொத்தம் 124 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், 51 காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கங்களையும் வழங்கினார். இதனையடுத்து, பல்வேறு துறைகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 31 பயனாளிக்கு ரூ.18.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
விழாவில், இணை ஆணையர் (மாநில வரி, ஈரோடு கோட்டம்) லஷ்மி பவியா தண்ணீரு, ஊராட்சிக் குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், ராஜேந்திரன், மணிமாறன், உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் (பொ), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ் (பொது), செல்வராஜன் (வளர்ச்சி), இணை இயக்குநர் (வேளாண்மை) வெங்கடேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராஜகோபால், முதன்மை கல்வி அலுவலர் சம்பத், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், வருவாய் வட்டாசியர்கள் (ஈரோடு) ஜெயகுமார், (மொடக்குறிச்சி) சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசு இசைப்பள்ளி, கிரேஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சித்தோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கைக்கோளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கலிங்கியம் அரசு உயர்நிலைப்பள்ளி, பெருந்துறை சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.பெ.அக்ரஹாரம் கிருஸ்துஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என 8 பள்ளிகளைச் சார்ந்த 270 மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.