பவானி அருகே வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
பவானி அருகே உள்ள சித்தோடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காலிங்கராயன்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குமாரபாளையம் காலிங்கராயன்பாளையம் மற்றும் பவானியை சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர் கூட்டாக சேர்ந்து கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வீட்டினுள் விற்பனைக்காக 42 பொட்டலங்களில் 300 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் (24) , காலிங்ராயன்பாளையத்தை சேர்ந்த மெய்யப்பன் (19) மற்றும் பவானி பகுதியை சேர்ந்த அஜித் (24) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.