ஈரோடு மாவட்டத்தில் 77 நிவாரண முகாம்கள் தயார்: ஆட்சியர் தகவல்..!

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கன‌ அடி நீர் திறக்கப்பட்டு வருவதால், காவிரி கரையோர‌ மக்களை தங்க வைக்க ஈரோடு மாவட்டத்தில் 77 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-31 08:00 GMT

மொடக்குறிச்சி லக்காபுரம் ஊராட்சி பரிசல் துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கன‌ அடி நீர் திறக்கப்பட்டு வருவதால், காவிரி கரையோர‌ மக்களை தங்க வைக்க ஈரோடு மாவட்டத்தில் 77 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (31ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் 30 கிராமங்கள் காவிரி கரையோரத்தில் உள்ளன. இதில் 18 கிராமங்கள் உபரி நீரால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக 77 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய துறைகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது காவேரி ஆற்றில் 1,25,500 கன அடி உபரிநீர் வந்து கொண்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக கூடும் என்பதால் கரையோர உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான கொடுமுடி, பவானி உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், லக்காபுரம் ஊராட்சி பரிசல் துறை, காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காங்கயம்பாளையத்தில் இப்பகுதி பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, நஞ்சைகாளம்பாளையம் ஊராட்சி குலவிளக்கு அம்மன் கோயில், சத்திரப்பட்டி ஊராட்சி, கொளாநல்லி கிராமம் ஆகிய கரையோரப் பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா, கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News