சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே டி.ஜி.புதூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கொள்ளேகாலுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-22 14:30 GMT

கைது செய்யப்பட்ட இருவரையும் படத்தில் காணலாம்.

சத்தியமங்கலம் அருகே டி.ஜி.புதூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கொள்ளேகாலுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவுபடி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஈரோடு சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


அதன்படி, ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி.ஜி.புதூர் நால்ரோடு பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், இன்று (மே.22) புதன்கிழமை காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார் டி.ஜி.புதூர் நால்ரோடு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது 26 மூட்டைகளில் 1,300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  உடனே, அந்த வந்த வாகனத்தில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள்,  பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர் நல்லக் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த உதயகுமார் (வயது 31), கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் பாரதி தெருவைச் சேர்ந்த ரமேஷ் (வயது 36) என்பது தெரியவந்தது. 

மேலும், பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் பகுதியில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து , இருவரையும் கைது செய்த போலீசார், 1,300 கிலோ ரேஷன் அரிசி,  ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News