ஈரோட்டில் காவல்துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
ஈரோட்டில் காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.;
ஈரோட்டில் காவல்துறை சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை ஈரோட்டில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, புதன்கிழமை (அக்.04) இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமை தாங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில், மாவட்டத்தில் இருந்து வந்திருந்த மனுதாரர், எதிர் மனுதாரர் ஆகியோரை அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு, இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை சட்டப்பூர்வமான வழிகளில் தீர்வு கண்டும், சமரசம் ஏற்படுத்தியும் மனு விசாரணை முடிக்கப்பட்டது.
அதேபோல், புதிதாக வந்த மனுக்களையும் காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இம்முகாமில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சட்ட ஆலோசகர் கணபதி, காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.