ஈரோடு மாவட்டத்தில் வருகிற 14ம் தேதி பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் வரும் 14ம் தேதி சனிக்கிழமை நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் வரும் 14ம் தேதி சனிக்கிழமை நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 14ம் தேதி அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது. முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.
ஈரோடு வட்டத்தில் வேப்பம்பாளையம் நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) தலைமையிலும், பெருந்துறை வட்டத்தில் வெள்ளோடு வடமுகம் கே.கே.வலசு நியாய விலைக் கடையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மொடக்குறிச்சி வட்டத்தில் அறச்சலூர் வெள்ளியங்கிரிபுதூர் நியாய விலைக் கடையில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் நடைபெறுகிறது.
இதேபோல், கொடுமுடி வட்டத்தில் கொந்தளம் நியாய விலைக் கடையில் ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் நாதிபாளையம் நியாய விலைக் கடையில் கோபி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நம்பியூர் வட்டத்தில் கடத்தூர் நியாய விலைக் கடையில் வடிப்பக அலுவலர் (சின்னபுலியூர் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை) தலைமையிலும் நடக்கிறது.
அதேபோல், பவானி வட்டத்தில் தொட்டிபாளையம் நியாய விலைக் கடையில் மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) தலைமையிலும், அந்தியூர் வட்டத்தில் பர்கூர்-2 நியாய விலைக் கடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் கெம்பநாயக்கன்பாளையம் நியாய விலைக் கடையில் வடிப்பக அலுவலர் (ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை) தலைமையிலும், தாளவாடி வட்டத்தில் தொட்டபுரம் நியாய விலைக் கடையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் நடக்க இருக்கிறது.
எனவே, நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை அப்பகுதி பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.