சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சி இணைப்பை எதிர்ப்பு போராட்டம்

சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2024-10-07 12:45 GMT

சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கொமராபாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள்.

சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கொமராபாளையம் ஊராட்சியை சத்தியமங்கலம் நகராட்சியில் இணைக்க அரசுக்கு பரிசீலனை அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சியில் இணைத்தால் 100 நாள் வேலை வாய்ப்பு பறி போகும்.

மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் இருக்காது, வரி உயர்வு பல மடங்கு உயரும். இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்நிலையில், இன்று (7ம் தேதி) கொமராபாளையம் ஊராட்சி பகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அனைத்து கட்சியினர் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமையில் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், கோரிக்கை நிறைவேற்றா விட்டால் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர். இந்த முற்றுகை போரட்டத்தால் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News