சத்தியமங்கலம் அருகே தனியார் பள்ளி வேன் டிரைவர் அடித்துக் கொலை
சத்தியமங்கலம் அருகே தனியார் பள்ளி வேன் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
பைல் படம்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அருகே கொப்புவாய்க்கால் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சாலையில் ஒரு பைக் கீழே விழுந்த நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்த நபர் விபத்தில் அடிபட்டு இறந்தது போல் தெரியாததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், புஞ்சைபுளியம் பட்டி அருகே உள்ள சாணார்பதி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (35) என்பதும், இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த தகவலறிந்த மாரிமுத்து வின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.