கோபிசெட்டிபாளையத்தில் ஆகஸ்டு 12ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்டம் கோபியில் ஆகஸ்ட் 12ம் தேதி நடக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-02 16:02 GMT

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (பைல் படம்).

கோபி கலை அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா புதன்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

8ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள். பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள். கணினி இயக்குபவர்கள். ஓட்டுநர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு. மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும்.

இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும். இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0424-2275860, 9499055942 மின்னஞ்சல் முகவரி: erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News