கோபி அருகே தனியார் பேருந்து - ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 17 பேர் காயம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே தனியார் பேருந்து ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.;

Update: 2023-10-01 02:15 GMT

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து - ஆம்புலன்சை படத்தில் காணலாம்.

ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூரு நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன்  தனியார் பேருந்து ஒன்று சனிக்கிழமை (நேற்று) மாலை கோபிசெட்டிபாளையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை மைசூரரை சேர்ந்த நாகேந்திரன் (வயது 35) என்பவர் ஓட்டினார்.

அப்போது, கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயுடன், தனியார் ஆம்னி வேன் ஆம்புலன்ஸ் ஒன்று, கோபியை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்சை சிவக்குமார் (27) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்நிலையில், அரசூர் பாலம் என்ற இடத்தில், எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்தும் - ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதே சமயம், பக்கத்தில் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி, தனியார் பேருந்து நின்றது.

இந்த விபத்தில் காயமடைந்த, 15 பேர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆம்புலன்ஸில் பயணித்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாய் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News