ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தனியார் கல்லூரிகளில் பொங்கல் விழா
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தனியார் கல்லூரிகளில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான மாணவ, மாணவிகள் புத்தாடை அணிந்து போட்டிகளில் பங்கேற்றனர்.;
ஈரோடு திண்டலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளரும் , தாளாளருமான சந்திரசேகர் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் ஜெயராமன் மற்றும் துணை முதல்வர் பேராசிரியர் ஜெயசந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் இராசமாணிக்கம், இணை செயலாளர் சின்னசாமி, யுவராஜா, பெருந்துறை பாலு, நிர்வாக மேலாளர் பெரியசாமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாணவர்கள் கும்மி, கோலாட்டம், காவடி ஆட்டம், சலங்கை ஆட்டம் மற்றும் சிலம்பாட்டம் போன்றவற்றில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
சென்னிமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா இன்று காலை 10.30 மணியளவில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி கல்லூரியின் தாளாளர் "பாரத் விதியா சிரோமணி" வசந்தா சுத்தானந்தன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தெய்வரிகாமணி, ஈரோடு, கல்லூரி முதல்வர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஞானவிநாயகர் திருக்கோவிலில் மின்னனுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இவ்விழாவின் தொடர்ச்சியாக கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள். பேராசிரியர்கள், கல்லூரியின் பணியாளர்கள் மற்றும் சிறப்பித்தனர்.
ஈரோடு- பெருந்துறை சாலையில் கூரபாளையம்பிரிவில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவினை கல்வி நிறுவன அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் தலைமையேற்றுத் துவக்கி வைத்தார். இவ்விழாவிற்கு ஈரோடு கவுந்தப்பாடி, மாவட்ட உழவர் விவாதக்குழு செயலாளர் வெங்கடாசலபதி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்.
இதனை தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் பெண்களின் மனம் கவர்ந்த மருதாணி இந்தல், பொங்கல் பாளைகளை அலங்கரித்தல், கோலமிடுதல், ஆண்களின் சலங்கை ஆட்டம், வழுக்குமரம் ஏறுதல், கபடி, சேவல்சண்டை, குடைராட்டினம். குழுநடனம், தனிநபர்நடனம், தப்பாட்டம் போன்ற தமிழ்ப் பாரம்பரியத்தை பறைசாட்டும் விதமாக பல்வேறு வகையான புகழ்மிக்க நிகழ்வுகள் நடைபெற்றன. கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையணிந்து வந்திருந்த மாணவர்களின் வண்ணக்கோலங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தன.
இதேபோல, மாவட்டத்தில் சத்தியமங்கலம், பவானி, கோபி , பருவாச்சி என பல்வேறு தனியார் கல்லூரிகளிலும் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.