ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு..!

நாடாளுமன்றத் தோ்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.;

Update: 2024-03-22 10:30 GMT

வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

நாடாளுமன்றத் தோ்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் கிடங்கில், நாடாளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட 8  சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

பின்னர், அவர் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற தேர்தல் 2024க்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்காக 2,222 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. 10,970 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 2,663 கட்டுப்பாட்டு இயந்திரம், 2,663 வாக்குப்பதிவு இயந்திரம், 2,885 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரம் தயாராக உள்ளது.

கடந்த 20ம் தேதி  நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளமான இஎம்எஸ் போர்டல் மூலம் கணினி சுழற்சி முறை துவக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 22ம் தேதி (இன்று) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் 2,222 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2,663 கட்டுப்பாட்டு இயந்திரம், 2,663 வாக்குப்பதிவு இயந்திரம் 2,885 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1800-425-0424 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு 23 புகார்களும், சிவிஜில் கைப்பேசிச் செயலி மூலமாக 10 புகார்களும் வரப்பெற்றுள்ளது. அனைத்து புகார்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 25 பறக்கும் படை, 24 நிலை கண்காணிப்பு குழு, 8 வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் இதுவரை ரூ. 93 லட்சத்து 23 ஆயிரத்து 078 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆவணங்கள் சமர்ப்பித்ததால் ரூ.22 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

முறையான ஆவணங்கள் இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது. அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இது தேர்தலுக்கான நேரம், எனவே தேர்தல் அதிகாரிகள் அவர்கள் பணியை செய்து வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து வருபவர்களிடம் ஆவணங்கள் இல்லை என்றால் மட்டுமே பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சமர்ப்பித்தால் உடனடியாக பணம் திரும்ப வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் ஏற்கனவே அறிவித்தபடி இது தேர்தலுக்கான நேரம் என்பதால் முறையான ஆவணங்களுடன் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். மலைப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆண்களை மட்டுமே பணியமர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதல் நாளிலேயே வாக்குச்சாவடி அலுவலர்கள் அங்கு சென்று தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுநாதன் (தேர்தல்), ஈரோடு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சதீஷ்குமார், சொரூபராணி (தொடர்பு அலுவலர், இவிஎம்), வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News