ஈரோடு பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த வட மாநில வாலிபர் கைது
பேருந்தில் கஞ்சா கடத்திய வட மாநில வாலிபரை ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்டவர்.
பேருந்தில் கஞ்சா கடத்திய வட மாநில வாலிபரை ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு வழியாக பேருந்தில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், போலீசார் ஈரோடு பேருந்து நிலையத்துக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து ஈரோடு வந்த பேருந்தில் இருந்து பண்டல்களை வடமாநில வாலிபர் இறக்கி எடுத்துச் சென்றதை பார்த்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் இருந்த பண்டல்களை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் ஒடிசா மாநிலம் சண்டிபதார் பகுதியை சேர்ந்த லலித் பஹாரின் மகன் ஆர்ட்டா பஹார் (வயது 26) என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலமாக கஞ்சாவை கடத்தி வந்த அவர் சேலத்தில் இறங்கி, அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு ஈரோடு வழியாக கஞ்சாவை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆர்ட்டா பஹாரை கைது செய்தனர்.