ஆப்பக்கூடல் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை கைப்பற்றிய பாமக
ஆப்பக்கூடல் பேரூராட்சியில் இன்று நடைபெற்ற துணைத்தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் பாமக வேட்பாளர் குமாரசாமி வெற்றி பெற்றார்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகள் உள்ளன. இதில் 5 வார்டுகளில் திமுகவும், 6 அதிமுகவும், பாமக , காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக தலா ஒரு இடங்களையும் கைப்பற்றியது. இந்நிலையில் மார்ச் 4ம் தேதி நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத்தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 5வது வார்டு கவுன்சிலர் செல்வி என்பவர் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து கடும் போட்டி நிலவி வந்த நிலையில் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற துணைத்தலைருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் திமுகவை சேர்ந்த 13 வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் என்பவர் துணைத் தலைவர் பதவிக்கும், அதேபோல் பாமகவை சேர்ந்த 8வது வார்டு கவுன்சிலர் குமாரசாமி என்பவரும் போட்டியிட்டனர்.
இதில் பாமகவை சேர்ந்த குமாரசாமி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்னம்பலம் வெற்றி பெற்ற குமாராசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து, பேரூராட்சி துணைத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட குமாரசாமிக்கு பேரூராட்சி தலைவர் செல்வி , பேரூராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.