அம்மாபேட்டை அருகே மண் எடுக்க லாரிகளை அனுமதிக்கக் கோரி மறியல்
அம்மாபேட்டை அருகே கரடிப்பட்டியூர் ஏரியில் வண்டல் மண் அள்ளிச் செல்வதற்கு டிப்பர் லாரிகளையும் அனுமதிக்கக் கோரி திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது.;
அம்மாபேட்டை அருகே கரடிப்பட்டியூர் ஏரியில் வண்டல் மண் அள்ளிச் செல்வதற்கு டிப்பர் லாரிகளையும் அனுமதிக்கக் கோரி திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் அடுத்த கரடிப்பட்டியூர் ஏரியிலிருந்து விவசாயிகளுக்கு வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பம் அளித்து, அனுமதி பெற்ற விவசாயிகள் இந்த ஏரியிலிருந்து மண் அள்ளிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பேரில், குருவரெட்டியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 40 விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரடிப்பட்டியூர் ஏரியிலிருந்து டிராக்டர் மட்டுமல்லாமல், டிப்பர் லாரிகளிலும் மண் அள்ளிச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கு, லாரிகள் மூலம் மண் எடுத்துச் செல்ல அனுமதியில்லை எனக் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மண் அள்ளிச் செல்ல ஏரிக்கு வந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் குருவரெட்டியூர் - கொளத்தூர் சாலையில் வாகனங்களை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அரசு விதிகளின்படி டிராக்டரில் மட்டும் மண் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும், டிப்பர் லாரிகளுக்கு அனுமதியில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக, வண்டல் மண், களிமண் மற்றும் மண் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், விவசாயிகள் எனும் பெயரில் இடைத்தரகர்கள் டிப்பர் லாரிகள் மூலம், வீட்டுமனைகள், வணிக நிறுவனங்களுக்கு கிராவல் மண் அள்ளிச் செல்ல திட்டமிட்டு வந்துள்ளனர்.
இதற்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் போராட்டம் நடைபெற்றுள்ளது எனத் தெரிவித்தனர். டிராக்டர்கள், டிப்பர் லாரிகளை சாலையில் நிறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.