மனித உயிரிழப்புக்கு ரூ.25 லட்சம் வழங்க கோரி ஆசனூர் மாவட்ட வன அலுவலகத்தில் மனு
Erode news- வன விலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய கோரி நமது நிலம் நமதே விவசாயிகள் நல பாதுகாப்பு சங்கத்தினர் ஆசனூர் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் மனு அளித்தனர்.
Erode news, Erode news today- வன விலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய கோரி நமது நிலம் நமதே என்ற விவசாயிகள் நல பாதுகாப்பு சங்கத்தினர் ஆசனூர் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் நமது நிலத்து நமதே என்ற விவசாயிகள் நல பாதுகாப்பு சங்கத்தினர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர், கேர்மாளம், ஜீரகள்ளி, தலமலை, தாளவாடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து, விவசாய பயிர்களையும் விவசாயிகளின் சொத்துக்களையும் தொடர்ந்து சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
சில இடங்களில் வன விலங்குகளால் விவசாயிகள் உயிரிழப்புகளையும், பொருள் இழப்புகளையும் சந்தித்து வருகின்றனர். இதற்கு நிரந்தரமான தீர்வாக, கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் பயனற்ற ரயில் தண்டவாளத்தை வேலியாக அமைப்பதற்கான திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆகவே, போர்க்கால அடிப்படையில் பயனற்ற ரயில் தண்டவாளத்தில் வேலி அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் விவசாயிகளின் கரும்பு வாகனங்கள் பல சிரமங்களை சந்திக்கின்றன. கரும்பு வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கவும், அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதல் எடையுடன் வரும் கரும்பு வாகனங்களை மூன்று முறை எச்சரித்த பின் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தச் செயலையும் இதுவரை வனத்துறை சரியாக செயல்படுத்தாமல் சோதனைச்சாவடியில் நிதி வசூல் செய்யும் வேலையை மட்டும் வனத்துறை ஆர்வமாக மேற்கொள்கிறது .
அந்த கட்டண வசூலையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ளவாறு வசூலிக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில், தாளவாடி விவசாயிகள் 24 மணி நேரமும் தடை இன்றி பயணிக்க, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பணி எதையும் வனத்துறை இதுவரை மேற்கொள்ளவில்லை.
வருவாய்த்துறையினர் தாளவாடி விவசாயிகளிடம் இருந்து புகைப்படங்கள் மற்றும் விவரங்களை சேகரித்து வனத்துறையிடம் ஒப்படைத்த பின்பும், விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான எந்த வேலையையும் வனத்துறை மேற்கொள்ளவில்லை. ஆகவே உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப் படி விரைந்து செயல்பட்டு விவசாயிகளுக்கான அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
தாளவாடி வனப்பகுதியில் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறுவதற்கான முழு முதல் காரணம், இந்த வனப்பகுதியில் சமீப ஆண்டுகளாக வளர்ந்து வரும் காட்டு ஆவாரம் பூ செடி தான். இந்தச் செடி , வனம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தச் செடி வளர்ந்துள்ள வனப்பகுதியில் மற்ற புல் உள்ளிட்ட எந்த சிறு செடியும் வளர்வதில்லை. இதனால், யானை, மான், பன்றி உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை.
இதன் காரணமாகவே வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி , விவசாய நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறையிடம் எந்த விதமான திட்டமோ, தொழில்நுட்பமோ இல்லை என்பது கவலையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த செடியை வெட்டி அப்புறப்படுத்தும் பணியை வனத்துறை மேற்கொண்டது. அப்போது, இந்தச் செடியை வேரோடு அப்புறப்படுத்துவதற்கு பதிலாக, தரை மட்டத்திற்கு மேல் உள்ள விறகுக்கான செடிகளை மட்டுமே வெட்டி விற்றார்கள் .
அதனால் இந்தச் செடி கவாத்து செய்தது போல, மீண்டும் பரவலாக வலுவாக வளர்ந்து நிற்கிறது. வனத்துறையினர் இந்தச் செடியை வேரோடு பிடுங்கி முழுமையாக வனத்தில் இருந்து வெளியேற்றா விட்டால் , வனமும் வன விலங்குகளும் முழுமையாக அழிவைச் சந்திக்க நேரிடும். இந்தச் செடியை அப்புறப்படுத்தும் பணியை வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
வன விலங்குகளால் ஏற்படும் உயிர் இழப்பிற்கு, இருபத்தைந்து லட்சம் ( ரூ.25,00,000) ரூபாய் இழப்பீடாக வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுகிறோம். வழங்கப்படும் தொகை போதுமானது அல்ல. ஆகவே, வனவிலங்குகள் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் இழப்பீடு என்பதை அரசு அறிவிக்க வேண்டும். வனவிலங்குகள் தாக்குதலால் காயம் அடையும் மக்களுக்கு , உடனடியாக மருத்துவ சிகிச்சை தனியார் மருத்துவமனையில் வழங்க வேண்டும்.
அதற்கான முழு செலவையும் வனத்துறை ஏற்க வேண்டும். இக்களூர் பகுதியில் தொடர் அட்டகாசம் செய்து வரும் சின்ன பாகு பலி யானையை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.